விளையாட்டு

தோனி பெயரில் பெவிலியன்: திறந்து வைக்க மறுத்த ’தல’!

தோனி பெயரில் பெவிலியன்: திறந்து வைக்க மறுத்த ’தல’!

webteam

தனது பெயர் சூட்டப்பட்டுள்ள பெவிலியனை திறந்து வைக்க, அன்பாக மறுப்புத் தெரிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்திய அணி தத்தளிக்கும் நேரத்தில் ஆலோசனை வழங்கி, கைகொடுக்கும் இடத்தில் இருக்கும் அவர், சமீபத்தில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். உல கக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளார் தோனி. இதுதான் அவருக்கு கடைசி தொடர். இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி, ராஞ்சியில் நாளை நடக்கிறது. இது தோனியின் சொந்த ஊர். இதனால் தோனியைக் கவுரவிக்கும் வகையில், அந்த மைதானத்தின் தெற்கு ஸ்டாண்ட்டுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சுனில் கவாஸ்கர் ஸ்டாண்ட், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் வீரேந்திர சேவாக் ஸ்டாண்ட் இருப்பதை இருப்பதை ராஞ்சி ஸ்டேடியத்தின் தெற்கு ஸ்டாண்டுக்கு தோனி பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான பயிற்சியை இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் இன்று காலை தொடங்குகின்றனர். அப்போது, இந்த ’எம்.எஸ்.தோனி பெவிலிய’னை திறந்து வைக்க ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னிலையில் அதை திறந்து வைக்குமாறு தோனியிடம் கேட்டனர். அதற்கு அன்பாக மறுப்புத் தெரிவித்துவிட்டார் தோனி. 

‘’நானே அதை திறந்தா, சொந்த மண்ணில் என்னை வெளியூர்க்காரன் மாதிரி உணர்த்தும்’’ என்று கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார், மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் தேபாஷிஷ் சக்கரவர்த்தி. இதையடுத்து அவர் திறந்து வைக்கவில்லை.