விளையாட்டு

முதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை!

முதன் முறையாக முத்தரப்பு தொடரை வென்று பங்களாதேஷ் சாதனை!

webteam

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, முதன்முறையாக முத்தரப்பு தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அயர்லாந்து, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு, ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தில் நடந்துவந்தது. லீக் போட்டிகள் முடிந்து, இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. 

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் அம்ப்ரிஸ் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடியில் இறங்கினர். ஹோப் 64 பந்தில் 74 ரன் எடுத்த நிலையில் மெஹடி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து பிராவோ வந்தார். அணியின் ஸ்கோர், 24 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்னாக இருந்தபோது, மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து பெய்ததால், போட்டி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, பங்களாதேஷ் அணிக்கு 24 ஓவர்களில், 210 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 18 ரன்னில் கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷபீர் ரகுமான், கேப்ரியல் பந்தில் டக் அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹிமும் சவும்யா சர்காரும் நிலைத்து நின்று ஆடினர். ரஹிம் 36 ரன்னிலும் சர்கார் 66 ரன்னிலும் வெளியேற, தடுமாறத் தொடங்கிய பங்களாதேஷ். 

பின்னர் வந்த மோசோடாக் ஹுசைன், 20 பந்தில் அரை சதம் அடித்து மிரட்டினார். பங்களாதேஷ் வீரர் அடித்த அதிவேக அரைசதம் இது. அவர் 24 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 52 ரன் விளாச, அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் முத்தரப்பு தொடரை முதன் முதலில் வென்று அசத்தியுள்ளது அந்த அணி. ஆட்டநாயகனாக ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார்.