விளையாட்டு

வீரர்களின் குடும்பங்களுக்காக முகமது ஷமி 5 லட்சம் உதவி

webteam

புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களின் மனைவிகளுக்கு உதவும் நல அமைப்புக்கு ரூ.5 லட்சம் நிதியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வழங்கினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றன. இதைத்தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியினை செய்துவரும் இந்திய அணியின் வீரர்கள் மக்களும் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் எனக் கேட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி அளிக்க உள்ளதாகவும் அதற்கான வேளைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர்களை தான் நடத்தி வரும் சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளுக்கு உதவும் நல அமைப்புக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது, வீரர்கள் எல்லையில் நின்று குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அவர்கள் இப்போது இந்த உலகில் இல்லாதநிலையில் அவர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.