வீட்டிற்கு வந்த தோனியை தான் சரியாக கவனிக்கவில்லை என கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதனால் தான் தோனி தன்னை மீண்டும் அணியில் சேர்க்கவில்லை என நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கிரிக்கெட் அணியினர் உடனான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். அதில், “ 2006ம் ஆண்டு நொய்டாவில் உள்ள என்னுடைய வீட்டிற்கு சக வீரர்களை விருந்துக்கு அழைத்தேன். அப்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். காரணம், சச்சின், கங்குலி, பயிற்சியாளர் கிரேக் செப்பல் போன்றவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு முறையான கவனிப்பை அளிக்க வேண்டுமென்ற பதட்டம் இருந்தது. சீனியர்களான அவர்கள் எல்லாம் தனி அறையில் இருந்தனர்.
அதேவேளையில் தோனி, ரெய்னா போன்ற ஜூனியர்கள் தனி அறையில் இருந்தார்கள். நான் சீனியர்களை கவனிக்கும் ஆர்வத்தில் ஜூனியர்களை சரிவர கவனிக்கவில்லை” எனத் தெரிவித்தார். மேலும் வேடிக்கையான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்ட கைஃப், பிரியாணி பரிமாறியபோது தோனிக்கு நான் சரிவர கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் தோனி கேப்டன் ஆனதுமுதல் நான் இந்திய அணியில் இடம்பெறவில்லைபோல என சிரித்துக்கொண்டே கூறினார்.
மேலும், தோனி இன்னமும் அந்த விருந்தை ஞாபகம் வைத்துள்ளதாகவும், நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன். நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என அவர் விளையாட்டாகவும் இன்றும் சொல்வார் என்றும் கைஃப் தெரிவித்துள்ளார்.