விளையாட்டு

அமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா

அமீரை இரண்டு முறை எச்சரித்த அம்பயர் - அரைசதம் விளாசிய ரோகித் சர்மா

rajakannan

பேட்டிங் ஆடுகளத்தின் நடுவே நடந்ததால் இரண்டு முறை பாகிஸ்தான் வீரர் முகமது அமீரை அம்பயர் எச்சரித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ஷிகர் தவான் இல்லாததால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் முதல் ஓவரை முகமது அமீர் வீசினார். முதல் பந்தை கே.எல்.ராகுல் சந்தித்தார். முதல் ஓவரில் அமீர் ரன் ஏதும் கொடுக்கவில்லை. அமீர் வீசிய மூன்று ஓவருக்குள் இரண்டு முறை பந்துவீசிவிட்டு பேட்டிங் ஆடுகளத்தின் நடுவே நடந்து சென்றார். இதனால், அம்பயர் ஆக்ஸன்போர்டு இரண்டு முறை அவரை அழைத்து எச்சரித்தார். 

ஒருவேளை மூன்றாவது முறையும் அமீர் இவ்வாறு ஆடுகளத்திற்கு நடுவில் ஓடினால், பந்துவீச மேற்கு தடை விதிக்கப்படும். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக அவர் உள்ளார். இதுவரை அவர் உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். கே.எல்.ராகுல் 30 ரன்களுடன் விளையாடி வருகிறார்.