விளையாட்டு

ஓடி வந்து மனைவியை உற்சாகமூட்டிய ஸ்டார்க்: அதிரடி காட்டிய ஹீலி

ஓடி வந்து மனைவியை உற்சாகமூட்டிய ஸ்டார்க்: அதிரடி காட்டிய ஹீலி

webteam

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் திடீரென மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகி தாயகம் திரும்ப விரும்பினார். மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இறுதியாட்டத்தை நேரில் காண அவர் விரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான முக்கிய காரணம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிந்த ஒன்று தான்.

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி, ஸ்டார்க்கின் மனைவி என்பதும் அவரை உற்சாகமூட்டவே ஸ்டார்க் சொந்த நாடு பறக்க விரும்பியதும் என்பதும் அனைவரும் அறிந்ததே. சொந்த நாடு திரும்ப அனுமதி கிடைக்கவே பெருந்திரளானோருக்கு மத்தியில் தமது மனைவியை உற்சாகப்படுத்தும் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்தார் ஸ்டார்க்.

அவரது இந்த முடிவுக்கு சானியா மிர்சா உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் பலர் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். கடந்த சில போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிராத ஹீலிக்கு இப்போது ஆட்டத்தில் உற்சாகம் பீறிட்டது. 39 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் விளாசி மைதானத்தில் திரண்டிருந்த 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

அலீசாவின் ஆட்டம் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்றது. கேமரா கண்களும் அலீசா ஹீலியையும், மிச்செல் ஸ்டார்க்கையும் அவ்வவ்போது படம்பிடித்து இறுதிப்போட்டியை சுவாரஸியப்படுத்தியது.