விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் காண முடியாத 5 ஜாம்பவான்கள்! - ஒரு பார்வை

JustinDurai

முந்தைய ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முக்கிய வீரர்கள் 5 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் அவர்கள்?  

பிரிட்டனைச் சேர்ந்த 38 வயது நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான மோ ஃபரா முந்தைய ரியோ ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவர். 5000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் தங்கம் வென்றார். 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இவ்விரு பிரிவுகளிலும் தங்கம் வென்றிருந்தார். 4 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற மோ ஃபரா டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருந்தார்.

ஆனால், பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு குறைவான நேரத்திலேயே பந்தய இலக்கை கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 19 நொடிகள் பின்தங்கி டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் வாய்ப்பை தவறவிட்டார். மோ ஃபரா தகுதி பெறாத நிலையில் 5 ஆயிரம் மற்றும் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் உகாண்டாவைச் சேர்ந்த ஜோஸ்வா செப்டகய் தங்கப்பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் இந்தமுறை பங்கேற்வில்லை. சர்வதேச தரநிலையில் நான்காவது இடத்தில் உள்ள மரின் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார். இதனால் இந்தியாவின் சிந்து, சீனத் தைபேயின் டாய் சூ யிங் ஜப்பானின் ஒக்குஹரா, அகேனே யமாகுச்சி ஆகியோர் தங்க வேட்டைக்கான போட்டியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக்கில் ஆடவர் மும்முறை தாண்டுதலில் இருமுறை தங்கம் வென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் டெய்லர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மாதம் செக்குடியரசில் நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இருமுறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் டேவிட் ருடிஷா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஹாட்ரிக் தங்கம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். 2019ஆம் ஆண்டு நேரிட்ட கார் விபத்து காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதேபோல் கிரோக்கோ ரோமன் பிரிவு மல்யுத்தத்தில் இருமுறை தங்கப்பதக்கம் வென்ற ரோமன் விளாசோவும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.