டேவிட் மில்லர், ரஷித் கானின் அபார ஆட்டத்தால், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ்.
ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தினார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஐபிஎல் அணி கேப்டன் பதவியை ஏற்பது இதுவே முதல்முறை! டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். ராபின் உத்தப்பா, மொயின் அலி அடுத்தடுத்து வெளியேற, அடுத்து வந்த ராயுடு, ருதுராஜுடன் இணைந்து நிதான ஆட்டத்தை ஆடத் துவங்கினார். ராயுடு அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஜோசப் பந்துவீச்சில் 46 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ருதுராஜ் கெய்க்வாட்-உம் 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் வெளியேறினார்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்களான ஷிவம் துபேவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இருவரும் நிதானமாகவே ஆடியதால் ஸ்கோர் மந்தமாக நகரத் துவங்கியது. பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை ஜடேஜா விளாச, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ்.
சுப்மன் கில், விருத்திமான் சஹா ஆகியோர் குஜராத் தரப்பில் ஓப்பனர்களாக களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில் சுப்மன் கில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த விஜய் ஷங்கர் தீக்ஷனா பந்துவீச்சில் டக் அவுட்டாக குஜராத் 2 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சஹா 11 ரன்களிலும் அடுத்துவந்த அபினவ் மனோகர் 12 ரன்களிலும் அவுட்டாக குஜராத்தின் வெற்றி வாய்ப்பு மங்கத் துவங்கியது.
ஆனால் அதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார் டேவிட் மில்லர். நடுவில் ராகுல் தெவாட்டியா சோபிக்கத் தவறி 6 ரன்களில் வெளியேற, அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வான வேடிக்கை நடத்திக் கொண்டிருந்தார் மில்லர். கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் தன் பங்குக்கு சிஎஸ்கே பந்துவீச்சை பதம் பார்க்க, குஜராத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தூள் கிளப்பிக் கொண்டிருந்த மில்லர், அரைசதம் கடந்ததும் பொறுமையாக விளையாட, ரஷித் கான் சிக்ஸர், பவுண்டரியாக விளாசித் தள்ளினார்.
கிறிஸ் ஜோர்டான் வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸர்களை ரஷித் கான் விளாச, சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பு நழுவத் துவங்கியது. பிராவோ பந்துவீச்சில் ரஷித் கான் வெளியேற, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஓவரை பவுலிங்கில் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஜோர்டனிடம் கொடுக்க, சிஎஸ்கே ரசிகர்களே அதிர்ச்சி அடைந்தனர். முதல் இரு பந்துகள் ரன் ஏதும் கொடுக்காத ஜோர்டன், 3வது பந்தில் 6 ரன்களை வாரி வழங்கினார். 4 வது பந்தை நோ பாலாக வீச, அடுத்து வந்த “ப்ரீ ஹிட்டில்” பவுண்டரி விளாசினார் மில்லர்.
5வது பந்தில் 2 ரன்களை மில்லர் எடுக்க, சிஎஸ்கேவின் வெற்றி தூள் தூளாக நொறுங்கியது. சிஎஸ்கேவிற்கு கில்லராக மாறியிருந்த மில்லர் 51 பந்துகளை சந்தித்து, 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 94 ரன்களை குவித்திருந்தார். முதல் முறையாக கேப்டன் பதவியேற்ற ரஷித் கான் 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் சென்னை அணி 5வது தோல்வியை தழுவியது. அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 5வது வெற்றியைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ராஜாவாக அமர்ந்துவிட்டது.
சென்னை அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் அரைசதம் விளாசி வலுசேர்த்த போதிலும், பவுலிங்கில் ஜோர்டன் தன் பங்குக்கு அரைசதம் அளவுக்கு ரன்களை வாரி வழங்கியதால் கைமேலிருந்த வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது. 3 ஓவர் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த முகேஷ் சவுத்ரிக்கு ஏன் கடைசி ஓவர் கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.