விளையாட்டு

முதல் வீரராக 600 ரன்களை கடந்த ஷகிப் - சச்சின், ஹைடன் சாதனையில் இடம்பிடித்தார்

rajakannan

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வீரராக பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹாசன் 600 ரன்களை எட்டியுள்ளார். 

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லாட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இமாம்-உல்-ஹாக் 100, பாபர் அசாம் 96 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்பிகூர் ரஹ்மான் 5, சைஃபுதீன் 3 விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து, 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது. தமிம் இக்பால் 8, சவுமியா சர்கார் 22, முஸ்பிகூர் ரஹிம் 16 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷகிப் அல் ஹாசன் மட்டும் தனி ஆளாக போராடினார். லிட்டன் தாஸ் சற்றுநேரம் தக்குபிடித்து 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்த ஷகிப் 77 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 33 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வீரராக ஷகிப் அல் ஹாசன் 600 ரன்களை கடந்துள்ளார். மொத்தம் அவர் இந்தத் தொடரில் 606 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இதுவரை இரண்டு பேர்தான் உலகக் கோப்பை தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். சச்சின் 673 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹைடன் 659 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

8 இன்னிங்சில் மட்டுமே விளையாடியுள்ள ஷகிப், 5 அரைசதம், இரண்டு சதம் விளாசியுள்ளார். தொடர்ந்து 7 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 600 ரன்களுக்கு மேல் குவித்ததோடு மட்டுமல்லாமல் 11 விக்கெட்டையும் அவர் சாய்த்துள்ளார். ஷகிப் அல் ஹாசனுக்கு இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வழங்க வாய்ப்புள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா 544, வார்னர் 516, பின்ச் 504, ரூட் 500 ரன்கள் குவித்துள்ளனர். அதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய பேர் 600 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது. சச்சின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.