விளையாட்டு

பாக்சிங் ரிங்குக்குள் ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் டைசன் 

பாக்சிங் ரிங்குக்குள் ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் டைசன் 

EllusamyKarthik

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாக்சிங் விளையாட ரிங்குக்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். 

‘மரண அடி மாவீரன்’ என எல்லோராலும் அழைக்கப்படும் டைசன் பாக்சிங் களத்திற்கு 1985இல் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இருபது ஆண்டுகள் பாக்சிங் உலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். 

1987 முதல் 1990 வரையில் டைசனை எதிர்த்து விளையாடிய எந்தவொரு குத்துச்சண்டை வீரராலும் அவரை வீழ்த்த முடியாத சாம்பியனாக திகழ்ந்தார். சர்வதேச அளவில் மொத்தமாக 58 போட்டிகளில் விளையாடியுள்ள டைசன் அதில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 44 போட்டிகளில் தன்னை எதிர்த்து விளையாடியவர்களை நாக் அவுட் செய்து வென்றுள்ளார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாக்சிங் அரங்கில் பல்வேறு வெற்றிகளைக் குவித்துள்ள டைசன் கடந்த 2005இல் தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பல சர்ச்சைகளுக்கும் அவர் ஆட்பட்டதுண்டு.

இந்நிலையில்  சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து பாக்சிங் ரிங்குக்குள் விளையாட ஆயத்தமாகி வருகிறார் டைசன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் செப்டம்பர் 12 அன்று நடக்க உள்ள கண்காட்சி ரீதியிலான குத்துச்சண்டை போட்டியில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ராய் ஜோன்ஸ் ஜீனியுடன் அவர் மோதவுள்ளார். இதனை டைசனே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாக இந்த போட்டி நடைபெற உள்ளது. அவரது ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.