விளையாட்டு

’டபுள் செஞ்சுரி அடி’ என்றார், அடித்தேன்: சாதனை ஜமான் ஜாலி!

’டபுள் செஞ்சுரி அடி’ என்றார், அடித்தேன்: சாதனை ஜமான் ஜாலி!

webteam

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். சர்வதேச அளவில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற சாதனையையும் பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக், பஹர் ஜமான் ஜோடி படைத்துள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான், நேற்று நான்காவது போட்டியில் விளையாடியது.  புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பஹர் ஜமான் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கியது. 

தொடக்கத்தில் இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. பஹர் ஜமான் 51 பந்துகளிலும், இமாம் 69 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். பின்னர் அடித்து விளையாட தொடங்கினர். 31.4 ஓவரில் 200 ரன்களை பாகிஸ்தான் எட்டியது. ஜமான் 92 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர், இமாம் உல் ஹக் 112 பந்துகளில் சதம் அடித்தார்.  41.4 ஓவரில் பாகிஸ்தான் 300 ரன்களை எட்டியது.  பாகிஸ்தான் 304 ரன்கள் எடுத்திருந்த போது, இமாம் உல் ஹக் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், பஹர் ஜமான் உடன் ஆசிப் அலி இணைந்தார். இருவரும் அதிரடி காட்டினர். இதனால் ரன், ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன் எடுத்தது. பஹர் ஜமான் 156 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக் காமல் இருந்தார். அசிப் அலி 22 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 155 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 

47 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பஹர் ஜமான் படைத்தார். மொத்தத்தில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 6 வது வீரராக இணைந்தார். குறைந்த இன்னிங்சில் (17 போட்டி) இரட்டை சதம் அடித்த சாதனையாளராகவும் அவர் உள்ளார்.

இந்தப் போட்டியில், முதல் விக்கெட்டுக்கு இமாம்-உல்-ஹக், பஹர் சமான் ஜோடி 304 ரன்கள் குவித்ததே சர்வதேச அளவில் அதிகமானதாகும். இதற்கு முன்பாக இலங்கையின் தரங்கா- ஜெயசூர்யா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 286 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை இந்த ஜோடி முறியடித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, ‘பாகிஸ்தான் வீரர்கள் ஏன் 200 ரன்களை குவிக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். ஜிம்பாப்வே-க்கு எதிராகவே எடுக்க முடியவில்லை என்றால் பிறகு எந்த நாட்டுடன் எடுப்பார்கள்?’ என்று கூறியிருந்தார்.

அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆர்தரும், இந்தப் போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்று பஹர் ஜமானிடம் கூறியிருந்தார். அவர்கள் சொன்னதை செய்து சாதித்துக் காட்டியுள்ளார் பஹர்.

இதுபற்றி பஹர் ஜமான் கூறும்போது, ’உண்மைதான். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், டாஸ் போடும் முன், ’டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நீ டபுள் செஞ்சுரி அடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பும் அவர் இதையே சொன்னார். அவர் என்ன நினைத்துச் சொன்னாரோ தெரியவில்லை. நான் அடித்துவிட்டேன். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வரின் சாதனையும் (194) எனக்கு தெரியும். இந்த நாள் எனக்கானதாக அமைந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. 

இந்தப் போட்டியில் இமாம் உல் ஹக்கும் சிறப்பாக ஆடினார். நாங்கள் இருவரும் உள்ளூர் போட்டியில் ஒன்றாக விளையாடியுள்ளோம். இந்தப் போட்டியில் நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அவர் என்னை ஊக்கப்படுத்தினார். போட்டிக்கு இடையில் காயம் அடைந்தேன். பிசியோ ட்ரீட்மென்டும் எடுத்துக்கொண்டேன். நடுவரிசை வீரர்களுக்கு ஆடுவதற்கு நான் வாய்ப்புக் கொடுக்கவில்லை. அடுத்தப் போட்டியில் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பேன்’ என்றார்.