விளையாட்டு

“சர்வதேச போட்டிகளில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உண்டு” - மைக்கெல் ஹஸ்ஸி

webteam

தோனிக்கு இன்னும் கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி உள்ளதாக மைக்கெல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேட்பனுமான தோனியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதை பொறுத்து அவர் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படலாம் எனப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளே நடக்குமா ? என சந்தேகம் எழுந்திருப்பது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மைக்கெல் ஹஸ்ஸி, “கண்டிப்பாக தோனி இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை கொண்டிருக்கிறார். ஆனால் அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவரே கூறினால் சரியாக இருக்கும். 

தோனி மனதளவில் போட்டிகளை சரியாக கணிக்கும் திறன் கொண்டவர். நான் சிலமுறை போட்டிகளை சீக்கிரம் முடிக்க வாய்ப்பு கிடைத்தால் தோனியிடம் கூறுவேன். ஆனால் அவர் வேண்டாம் என்பார். ஏனென்றால் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் நம்மை கணித்து விடுவார்கள் என்பார். தோனி எப்போது நினைக்கிறாரோ, அப்போது அவரால் சிக்ஸர் அடிக்க முடியும். அந்த திறன் என்னிடம் இல்லை” எனக் கூறியுள்ளார்.