கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து தனது கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுத்த ரசிகரால், லியோனல் மெஸ்ஸி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
உலக கால்பந்து ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் “உலகக் கோப்பை” இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் நாடுகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. இருந்தபோதும் முந்தைய ஆட்டங்களில் 11 வெற்றிகளை பதிவு செய்ததால் எளிதாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது அர்ஜென்டினா. ஆனால், இந்தப் போட்டியால் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக கடும் அதிருப்தியில் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஆட்டம் நிறைவுற்று தகுதி பெற்ற அறிவிப்பு வெளியானதும் அர்ஜென்டினா வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தடுப்புகளை எல்லாம் மீறி ஆடுகளத்திற்குள் அத்துமீறி ஓடிவந்தார். மெஸ்ஸி அருகே வந்து அவர் கழுத்தைப் பிடித்து கத்திய படி செல்ஃபி எடுக்க முயன்றார்.
மெஸ்ஸி ரசிகரை தட்டிவிட முயன்றபோதும் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்கும் முயற்சியில் அந்த ரசிகர் தீவிரமாக இருந்தார். நிறுத்து! நிறுத்து! என்று மெஸ்ஸி “ஸ்டாப்! ஸ்டாப்” என்று மெஸ்ஸி கத்தியும் பார்த்தார். இறுதியில் மெஸ்ஸி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து எரிச்சலுடன் நகர்ந்து சென்றார். பின் மைதானத்தின் பாதுகாப்புப் பணியாளர்களால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மைதான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த ரசிகர் வலுக்கட்டாய செல்ஃபி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். “எல்லா காலத்திலும் சிறந்த வீரர்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். “உங்கள் அழகான கால்பந்தின் மூலம் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி” என்று ஒரு குறிப்பையும் எழுதியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் மைதானத்திற்குள் புகுந்து விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த 4 ரசிகர்கள் சிறைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கோலியுடன் 'செல்ஃபி' - சிறைக்கு சென்ற நான்கு ரசிகர்கள்