விளையாட்டு

மெஸ்ஸி காயத்தால் அவதிப்படுவதாக வெளியான தகவல் -பைனலில் விளையாடுவாரா 'தல'?

மெஸ்ஸி காயத்தால் அவதிப்படுவதாக வெளியான தகவல் -பைனலில் விளையாடுவாரா 'தல'?

kaleelrahman

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி காயத்தால் அவதிப்படுவதால் பயிற்சியை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியோடு விடைபெற காத்திருக்கும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர். ஆர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டியை காண குவிந்துள்ள ரசிகர்கள். இவற்றிற்கு மத்தியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லினோனல் மெஸ்ஸி காயத்துடன் போராடி வருவதால் பயிற்சியை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியில்; லியோனல் மெஸ்ஸி களமிறங்குவதை காண உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மெஸ்ஸியின் கனவு கோப்பையும் இதுதான். இந்த போட்டி அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் 5 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, 3 கோல்களை அடிக்க உதவியாகவும் இருந்து முத்திரை பதித்துள்ளார். ஆனால், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று உலகக் கோப்பையை அவர் கைகளால் உயர்த்தினால் தான் அவரது கனவு நனவாக மாறும். ஆனால், நேற்று (வெள்ளிக்கிழமை) மெஸ்ஸி, தனது பயிற்சியை புறக்கணித்ததாக தகவல் வெளியானதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

குரோஷியா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்த பிறகு மைதானத்தில் இருந்து வெளியே சென்ற மெஸ்ஸி, நகர முடியாமல் தனது தொடை தசை பகுதியை பிடித்துக் கொண்டதாக தி மிரர் செய்தி வெளியிட்டது. ஆனால், அர்ஜென்டினா முகாமில் இருந்து மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டதாக உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் அரையிறுதியில் பங்கேற்ற பல வீரர்களுக்கு நீண்ட கால ஓய்வு வழங்கப்பட்டதாகவும், அதனால்தான் சில பயிற்சிகள் தவிர்க்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக ஜிம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பல ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் கூறுகையில்... மெஸ்ஸி காயத்தால் அவதிப்படுவதாக எழுந்த கேள்விகளை நிராகரித்திருந்தார். 'இல்லை, இல்லை அவர் காயமடையவில்லை நாங்கள் நெதர்லாந்துக்கு எதிராக 120 நிமிடங்கள் விளையாடினோம், அது அவருக்கு கடினமான ஆட்டமாக இருந்தது, ஆனால், அவர் ஒவ்வொரு ஆட்டத்தையும் முடிக்க விரும்புவதை நீங்கள் பார்க்கலாம்,' உடல் ரீதியாக அவர் மிகவும் வலிமையானவர், ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ஆட்ட நாயகன்' என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.'

காயம் இல்லை ஓய்வுதான் என மனதை தேற்றிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் மெஸ்ஸி களமிறங்கி மேஜிக் நிகழ்த்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். என்ன நடக்கும் என்று நாளை தெரியும்