விளையாட்டு

’எப்போது நடக்கும் என்று தெரியாது, ஆனால், அது என் கனவு’: சஞ்சு சாம்சன்

’எப்போது நடக்கும் என்று தெரியாது, ஆனால், அது என் கனவு’: சஞ்சு சாம்சன்

webteam

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து, நாட்டுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என் கனவு என்று கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இளம் வீரர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ’தகுதியான நபர்’ என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் இரட்டை சதம் விளாசி இருந்தார், சஞ்சு சாம்சன். 129 பந்துகளில் 10 சிக்சர், 21 பவுண்டரிகளுடன் 212 ரன்களை குவித்த அவருக்கு பரிசாக, இந்த அழைப்பு அமைந்துள்ளது என பலர் கூறியுள்ளனர்.

இதுபற்றி சஞ்சு சாம்சன் கூறும்போது, ‘’இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அணியில் எந்த இடத்தில் ஆடச் சொன்னாலும் ஆடுவேன். சமீபகாலமாக எனது ஆட்டமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகி றார்கள். இந்த மாற்றம் ஐந்து வருடத்துக்கு முன்பே நடந்துவிட்டது. மனரீதியாகவும் டெக்னிக்கலாகவும் என்னை மாற்றி ஆடிவருகிறேன். முழுத் திறமையை காட்டும் விதமாகவும் பயமில்லாத கிரிக்கெட்டையும் ஆடிவருகி றேன்.  இப்போதும் அப்படியே ஆடிவருகிறேன். இதை அப்படியே தொடர்வேன். 

இரட்டை சதம் அடித்தது பற்றி கேட்கிறார்கள். அது ஸ்பெஷல் இன்னிங்ஸ். பெங்களூரில் நடந்த போட்டியில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. நூறு ரன்களை கடந்ததும் இரட்டை சதம் சாத்தியம் என்றே நினைத்தேன். ஒவ்வொரு பந்தையும் வீணாக்காமல் அடித்தேன். நினைத்தது போல் இரட்டை சதம் விளாசினேன்.

அடுத்து இந்திய, ஒரு நாள் அணியிலும் இடம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்போது டி-20 போட்டியில் கவனம் செலுத்துகிறேன். இதில் சிறப்பாகச் செயல்பட்டால் அடுத்து, ஒரு நாள் போட்டிதான். எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.
டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடித்து, நாட்டுக்காகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. அது எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால், அதுதான் என் கனவு’’ என்றார்.