விளையாட்டு

பிக்பாஷ் டி20: கோப்பையை வென்றது ஆரோன் பின்ச் தலைமையிலான அணி!

webteam

பிக்பாஷ் டி20 கிரிக்கெட்டில் ஆரோன் பின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 8 வது பிக்பாஷ் போட்டி, கடந்த சில நாட்களாக அங்கு பல்வேறு நகரங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியும் (Melbourne Renegades), மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னே றின. இறுதிப்போட்டி, மெல்போர்னில் நேற்று நடந்தது.

முதலில் பேட் செய்த ரெனகேட்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக டாம் ஹூப்பர் 35 பந்தில் 43 ரன்னும், டேனியல் கிறிஸ்டியன் 30 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். 

அடுத்து களமிறங்கிய ஸ்டார்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டங்கும் (57) ஸ்டோயினிஸும் (39) சிறப்பானத் தொடக்கத்தைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் (12.5 ஓவர்) எடுத்திருந்த போது, அந்த அணி வெற்றி பெற்று விடும் என்றே தோன் றியது. அந்த அணி வீரர்களும் உற்சாகமாக இருந்தனர். 

(மேக்ஸ்வெல்)

ஆனால், தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும் போட்டியின் போக்கு மாறியது. அடுத்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை. 19 ரன் இடைவெளியில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலைகுலைந்தது ஸ்டார்ஸ் அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணியால், 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.