விளையாட்டு

டிராஃபிக் பிரச்னையால் சாப்பாடு லேட்: ஆட்டத்தை நீட்டித்த இந்திய ஏ அணி!

டிராஃபிக் பிரச்னையால் சாப்பாடு லேட்: ஆட்டத்தை நீட்டித்த இந்திய ஏ அணி!

webteam

டிராஃபிக் பிரச்னை காரணமாக நட்சத்திர ஓட்டலில் இருந்து வரவேண்டிய சாப்பாடு லேட் ஆனதால் கிரிக்கெட் போட்டியை அரை மணி நேரம் நீட்டிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் மோதுகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூர் அருகே உள்ள அலூரில் நடந்துவருகிறது. பெங்களூர் நகரத்தில் இருந்து அலூர் கிரிக்கெட் மைதானம் 28 கி.மீட்டரில் உள்ளது.

(மிட்செல் மார்ஷ்)

நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 86 ரன்களுடனும் நஸர் 44 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நேற்று, மதிய சாப்பாடு வர லேட்டானதால் போட்டி அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டதாக ’பெங்களூர் மிர்ரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணி வீரர்களுக்காக சிறப்பு உணவு, அங்குள்ள நட்சத்திர ஓட்டலான ரிட்ஸ் கார்டனில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பெங்களூர் டிராபிக் உலகறிந்தது என்பதால், முன்கூட்டியே வீரர்களுக்கான உணவு எடுத்துச் செல்லப்பட்டது. இருந்தாலும் டிராபிக்கில் சிக்கிவிட்டது உணவு எடுத்து வந்த வேன். ’இன்னும் வரலையே, வரலையே’ என்று கேட்டை எதிர்நோக்கி காத்திருந்தார்கள் அணி நிர்வாகத்தினர். வேன் வந்தபாடில்லை. இதனால் வீரர்களிடம் போட்டியை அரை மணி நேரம் நீட்டிக்கக் கூறினர். பின்னர் சாப்பாடு வந்ததும் போட்டியை நிறுத்திவிட்டு வரச்சொன் னார்கள். இந்தப் பிரச்னை சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

(ரிட்ஸ் கார்டன் ஓட்டல்)

இதுபற்றி பெங்களூரு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘வீரர்களுக்கான உணவை ஏன் சிட்டியில் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்? அருகிலேயே செய்திருக்கலாமே? மைதானத்தை கொடுத்ததோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. உணவு உள்ளிட்ட விஷயங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக்கொண்டதால், நாங்கள் இதற்கு பொறுப்பாக முடியாது’ என்றனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேலாளர் சபா கரீமிடம் கேட்டபோது, ‘இது சர்வதேச போட்டி. வீரர்களுக்குச் சிறந்த வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். அதனால்தான் நட்சத்திர ஓட்டலில் இருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. காலதாமதத்துக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார்.