விளையாட்டு

தீபக் சாஹர், மயங்க் அகர்வால் மிரட்டல்: இந்திய ஏ அணி அபார வெற்றி!

தீபக் சாஹர், மயங்க் அகர்வால் மிரட்டல்: இந்திய ஏ அணி அபார வெற்றி!

webteam

இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்புத் தொடரில் தீபக் சாஹர், மயங்க் அகர்வால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய ஏ அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா ஏ, வெஸ்ட் இண் டீஸ் ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதின. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய ஏ அணியும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியும் நேற்று மோதின. லைசெஸ்டரில் நடந்த இந்த தொடரில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஏ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி அந்த அணியின் பிளாக்வுட்டும் சந்தர்பால் ஹேம்ராஜும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பிளாக்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் தீபக் சாஹர். தொடர்ந்து அவரது பந்துவீச்சில் அனல் பறந்தது. ஹேம்ராஜ் சிறப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்தார். கேப்டன் தேவோன் தாமஸ் 64 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், 49.1 ஓவரில் அந்த அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய ஏ அணி தரப்பில் தீபக் சாஹர் பத்து ஓவர்கள் வீசி, 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். தாகூர், அகம து, விஜய் சங்கர், குணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் 222 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஏ அணி 38.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு அந்த இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் 112 ரன்கள் குவித்தார். பிரித்வி ஷா 27 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்தனர்.