பெவிலியன் அருகே நின்றுகொண்டிருந்த அந்த ஆஸ்திரேலிய வீரர் என்னை முகத்திலேயே குத்திவிடுவேன் என்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் சிறுவயதிலேயே டெஸ்ட் அணியில் விளையாடியவர். தோனியின் வருகைக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பார்த்திவுக்கு அரிதாகவே கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் வீடியோ கால் மூலம் நேர்காணல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பார்த்திவ் படேல் கிரிக்கெட்டின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் "2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் மாத்யூ ஹேடன் 109 ரன்கள் எடுத்திருந்தபோது பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்" என்றார்.
மேலும் தொடர்ந்த பார்த்திவ் "அந்தப் போட்டியில் ஆடும் லெவன் அணியில் நான் இல்லை. ஹேடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பும்போது நான் வீரர்களுக்குத் தண்ணீர் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அப்போது அவுட்டாகி செல்லும் ஹேடனை பார்த்து "ஹூ ஹூ ஹூ" என கிண்டல் செய்தேன். பின்பு மீண்டும் பெவிலியன் திரும்பும்போது ஹேடன் என்னைப் பார்த்து "இன்னொரு முறை அப்படி செய்தால் உன் முகத்தை உடைத்துவிடுவேன்" என்றார் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்" என்றார்.
நினைவுகளைத் தொடர்ந்த பார்த்திவ் " பிரிஸ்மேன் மைதானத்தில் என்னை அடிக்க நினைத்த ஹேடன் பின்பு என்னுடன் நண்பரானார். சிஎஸ்கே அணிக்காக நிறையப் போட்டிகளில் ஒன்றாக விளையாடினோம். நாங்கள் இருவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் இருந்தோம். அணியிலும் வெளியிலும் எங்களது நடப்பு தொடர்ந்தது. ஐபிஎல் முடிந்ததும் ஒருமுறை ஆஸ்திரேலியா சென்று இருந்தேன். அப்போது தன்னுடைய வீட்டுக்கு அழைத்த ஹேடன் தானே சமைத்த சிக்கின் பிரியாணியும், பருப்பும் எனக்கு பரிமாறினார்" என்றார் அவர்.