விளையாட்டு

தனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை சுழல் பந்துவீச்சாளர் தனஞ்செயா 6 விக்கெட் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இலங்கையிடம் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முதல் மூன்று போட்டிகளை வென்று கைப்பற்றியது. இருந்தாலும் நான்காவது ஒரு நாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 3 ரன்னில் தோல்வியைத் தழுவியது. கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. 

முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. கேப்டன் மேத்யூஸ் 97 ரன்களும் டிக்வெல்லா 43 ரன்களும் எடுத்தனர். 

அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 24.4 ஓவர்களில், 121 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் குறைந்த ஸ்கோர் இது. அந்த அணியில் பொறுப்பு கேப்டன் குயின்டான் டி காக் மட்டும் 54 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதன் மூலம் இலங்கை அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகிலா தனஞ்செயா ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.