விளையாட்டு

26 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டனாக சாதித்த பாபர் அசாம் - முழு விபரங்கள்

26 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டனாக சாதித்த பாபர் அசாம் - முழு விபரங்கள்

சங்கீதா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 196 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், பல்வேறு சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தநிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில், கடந்த 12-ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தனர். பின்னர், களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி முதல் 148 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 408 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி துவங்கியது. 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா சிறிது நேரம் பேட்டிங் செய்து விட்டு 2 விக்கெட்டுக்கு 97 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 171.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிரா செய்தது. 

இந்தப் போட்டியில் 603 நிமிடங்கள் களத்தில் இருந்து, 21 பவுண்டரிகள் விளாசி, 425 பந்துகளை எதிர்கொண்டு 196 ரன்களை பாபர் அசாம் எடுத்துள்ளார். இதையடுத்து இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அதன்படி, 186 ரன்கள் எடுத்தபோது, 4-வது இன்னிங்சில் உலக அளவில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்கிற சாதனையைப் படைத்தார் பாபர் அசாம்.

இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஆதர்டன் 1995-ல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். மேலும் 425 பந்துகளை எதிர்கொண்டு, 4-வது இன்னிங்சில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட பேட்டர்களில் 4-ம் இடம் பிடித்துள்ளார் பாபர் அசாம்.

அவருக்கு முன்னதாக 492 பந்துகளை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் ஆதர்டன் (1995) முதலிடத்திலும், 462 பந்துகளை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் ஹெர்ப் சுட்க்ளிஃப் (1928) இரண்டாவது இடத்திலும், 443 பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் (1979) மூன்றாவது இடத்திலும், 42 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் அசாம் 425 பந்துகளை எதிர்கொண்டு 4-ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும், டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்சில், 7-வது அதிக ரன்களை எடுத்து பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு இலங்கை வீரர் சங்ககரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 192 ரன்கள் எடுத்தநிலையில், அதனை முந்தி 196 ரன்கள் எடுத்து பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார். 

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிலேயே, அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ்கான், கடந்த 2015-ம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக 4-வது இன்னிங்சில் 171 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தநிலையில், தற்போது அந்த அணியின் பாபர் அசாம் அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் தான் 4-வது இன்னிங்சில் 369 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். அந்த சாதனையையும் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளியுள்ளார். இவ்வாறு மேலும் பல்வேறு சாதனைகளை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புரிந்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.