விளையாட்டு

நடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்

நடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்

webteam

பேட்டிங்கிற்கு சாதகமாக விளங்கும் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வருகின்றனர் சில பவுலர்கள்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக விளங்குவதால் பெரும்பாலான அணிகள் எளிதாக 300 ரன்களை எட்டிவிடுகின்றன. உலகக்கோப்பைக்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான தொடரில், நான்கு போட்டிகளில் இரு அணிகளும் 340 ரன்களுக்கு மேல் குவித்தன. நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் 6 போட்டிகளில் அணிகள் 300 ரன்களை கடந்துள்ளன. இவ்வாறு பேட்டிங்கிற்கு சாதகமாக விளங்கும் இங்கிலாந்து ஆடுகளங்களிலும், ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துகின்றனர் சில பந்துவீச்சாளர்கள். 

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரானப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐந்து விக்கெட்களை சாய்த்தார். சிறப்பான பந்துவீச்சின் மூலம் கெய்ல், ரஸ்ஸல், ப்ராத்வெய்ட் ஆகிய அதிரடி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். 

பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஆமிர், ஆஸ்திரேலிய அணியின் பலமான பேட்டிங் வரிசையை சீர்குலைத்து ஐந்து விக்கெட்களை தனதாக்கினார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்கள் கைபற்றிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். 

இந்தியாவின் சஹால், நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்குசன் ,மேற்கிந்திய தீவுகளின் ஓஷைன் தாமஸ் ஆகியோர் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் ஆடுகளங்களில் வரும் போட்டிகளிலும் பந்துவீச்சாளர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.