தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் பெங்கால் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி, 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பெங்கால் அணி.
கடைசி ஓவரில் பெங்கால் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 19 ரன்களை குவித்த அந்த அணியால் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ரன்னை எடுக்க முடியவில்லை. கடைசி பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் ஆகாஷ் தீப், தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால் பேட்டில் பட்ட பந்து, கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டேவின் கைகளில் தஞ்சம் அடைந்தது. உடனடியாக ஒரு நொடி கூட தாமதிக்காமல் பவுலர் எண்டில் இருந்த ஸ்டெம்பை நோக்கி பந்தை த்ரோ செய்து, ஸ்டெம்பை தகர்த்து ‘டைரக்ட் ஹிட்’ முறையில் ஆகாஷ் தீப்பை ரன்-அவுட் செய்தார்.
அந்த ரன் அவுட்டால் இரு அணியின் ரன்களும் சமன் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் 20 ஓவர்கள் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் விளையாடின. முதலில் பேட் செய்த பெங்கால் 4 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் விளையாடிய கர்நாடகா இரண்டே பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த 8 ரன்களை அடித்தது மணிஷ் பாண்டே தான்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை அன்று விதர்பா அணியை கர்நாடகா எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. கடந்த முறை தமிழ்நாடு அணி, சையத் முஷ்டாக் அலி தொடரில் கோப்பையை வென்றிருந்தது.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 10: Water Reminder - தண்ணீர் பருக நினைவூட்டும் அசத்தல் ஆப்!