பாலா தேவி எக்ஸ் தளம்
விளையாட்டு

சர்வதேச கால்பந்து|50 கோல்கள் அடித்து சாதனை.. புதிய மைல்கல்லை எட்டிய மணிப்பூரின் ’கோல் இயந்திரம்’!

சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிப்பூரைச் சேர்ந்த இங்கோகம் பாலா தேவி பெற்றுள்ளார்.

Prakash J

நேபாளத்தில் 2024 SAFF மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. SAFF மகளிர் சாம்பியன்ஷிப் என்பது தெற்காசியாவிலிருந்து பெண்கள் தேசிய அணிகளுக்கான கால்பந்து போட்டியாகும். இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் அடங்கும். இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்தின் ’கோல் இயந்திரம்’ என்று அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த பால தேவி, ஆட்டம் தொடங்கிய 35வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

பாலா தேவி

இதன்மூலம் அவர் தனது 50வது சர்வதேச கோலை அடித்த முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்தார்.

இதையும் படிக்க: ஜார்க்கண்ட்|பாஜகவில் இணைந்த EX முதல்வருக்கு சீட்.. 68 இடங்களில் நேரடி போட்டி.. ஆளும் கட்சிக்கு டஃப்!

இந்த மைல்கல்லை எட்டியது குறித்து பேசிய பால தேவி, "இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். இந்த சாதனையை என் அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு கால்பந்து விளையாட்டை சொல்லி கொடுத்தது என் அப்பாதான். நான் இன்று இங்கு இருப்பதற்கு காரணமும் என் அப்பாதான். அவர் சிறுவயதில் இருந்தே பந்தை உதைப்பது முதல் கோல் அடிப்பது வரை அனைத்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார். விளையாட்டில் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்குவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் இறங்கியதும் அவரைப் பற்றிய நினைவுகள் மற்றும் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் தேசிய அணியில் அங்கம் வகித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை அக்டோபர் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இது, அரையிறுதிக்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!