விளையாட்டு

பிசிசிஐ விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நிறைவு - விண்ணப்பித்தாரா அகர்கர்?

பிசிசிஐ விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நிறைவு - விண்ணப்பித்தாரா அகர்கர்?

JustinDurai

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு மணீந்தர் சிங், எஸ்எஸ் தாஸ் போன்ற பல அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதனால் இந்திய அணி மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே, இந்திய அணியை தேர்வு செய்யும் சேத்தன் சர்மா தலைமையிலான  தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்தது பிசிசிஐ. மேலும் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (நவ.28) முடிவடைந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் தேர்வுக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பதவிக்கு பிரபலமான முன்னாள் வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை. முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மனிந்தர் சிங், தொடக்க ஆட்டக்காரர் ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பதாரர்களில் முக்கியமான நபர்கள் ஆவார். 2021இல் மனிந்தர் சிங் தேர்வுக்குழு பணிக்கு விண்ணப்பித்திருந்தார், ஆனால் சேத்தன் ஷர்மாவால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. 

அஜித் அகர்கர் விண்ணப்பித்தாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. அகர்கர் விண்ணப்பித்திருந்தால் அவர் தேர்வுக் குழுத் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சொல்லப்படுகிறது. மும்பை கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவரான சலில் அன்கோலா, முன்னாள் கீப்பர் சமீர் திகே மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோரும் இதற்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து எல் சிவராமகிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன் போன்ற முக்கியமானவர்கள் விண்ணப்பிக்கவில்லை. இருப்பினும், முன்னாள் ஹைதராபாத் ஆஃப் ஸ்பின்னர் கன்வால்ஜீத் சிங், தென் மண்டல வேட்பாளராக பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதையும் படிங்களேன்: 'இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஐபிஎல் மீது பழிபோடுவதா?'-கம்பீர் விமர்சனம்