விளையாட்டு

சேஸிங் மாஸ்டர் - ரன் மெஷின் விராட் கோலியின் முக்கிய சாதனைகள் ! #HappyBirthdayViratKohli

சேஸிங் மாஸ்டர் - ரன் மெஷின் விராட் கோலியின் முக்கிய சாதனைகள் ! #HappyBirthdayViratKohli

Rishan Vengai

கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவானாகவும், தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராகவும் இருக்கும் விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை இன்று  கொண்டாடுகிறார். அவரது பல சாதனைகளில் சில முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்.

இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட்-டெஸ்ட் கேப்டன்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். பேட்டிங் ஜாம்பவான் ஆன விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியை 56 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 38 வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளார். 2015-2017ஆம் ஆண்டு வரையிலான இந்திய கேப்டனாக (2005-2008 வரை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கிற்கு சமமான) விராட் கோலி அதிக டெஸ்ட் தொடர் வெற்றிகளை (9) பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசியாவின் முதல் கேப்டன்

பேட்டிங் மேஸ்ட்ரோ விராட் கோலி தலைமையிலான டீம் இந்தியா, பார்டர்-கவாஸ்கர் (டிராபி 2018-19) தொடரில் வரலாற்றில் வலிமைமிக்க ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டனாக விராட் கோலி மாறினார்.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள்

விராட் கோலி 113 போட்டிகளில் 3932 ரன்கள் எடுத்துள்ளார். அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேட்டிங் சராசரி 53.13 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138.45 இருக்கிறது. டி20, ஒடிஐ, டெஸ்ட் என மூன்றுவிதமான பார்மேட்டிலும் 50+ சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமை விராட்கோலியிடமே உள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 36 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார் கோலி.

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்கள்

விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்டிங் சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளார், அப்படி அவரது சாதனைகளில் ஒன்று அவரது வாழ்க்கையின் சிறப்பம்சமாக மாறியுள்ளது என்றால், 'ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்கள் எடுத்தவர்' என்பதுதான். சச்சின் டெண்டுல்கர் (259 இன்னிங்ஸ்) மற்றும் சவுரவ் கங்குலி போன்ற முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி, விராட் கோலி 205 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள்

விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 477 சர்வதேச போட்டிகளில் விளையாடி 71 சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரை (100 சர்வதேச டன்கள்) முந்துவதற்கு அவருக்கு இன்னும் 29 சதங்கள் மட்டுமே குறைவாக உள்ளது.