விளையாட்டு

’மாதம் ஒரு லட்சம் ரூபாயில் வேலை தருகிறோம்’-வினோத் காம்ப்ளிக்கு ஆஃபர் கொடுக்கும் தொழிலதிபர்

’மாதம் ஒரு லட்சம் ரூபாயில் வேலை தருகிறோம்’-வினோத் காம்ப்ளிக்கு ஆஃபர் கொடுக்கும் தொழிலதிபர்

சங்கீதா

பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்துவருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்திருந்தநிலையில், அவருக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதற்கு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வினோத் காம்ப்ளி உள்நாட்டு கிரிக்கெட்டில் மிக இளம் வயதிலேயே வெற்றிவாகை சூடி வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வினோத் காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1084 ரன்கள் மற்றும் 2477 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு கடைசியாக சர்வதேசப் போட்டியில் விளையாடிய அவர், அதன்பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை. நல்ல வீரராக அறியப்பட்டாலும், அவரின் நடத்தை காரணமாக இந்திய அணியில் வெகுநாட்கள் ஜொலிக்க முடியவில்லை. பின்னர் 2011-ம் ஆண்டு அவர் தனது ஓய்வை அறிவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகராகவும், ஊடகங்களில் கிரிக்கெட் நிபுணராகவும் பணியாற்றினார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு டி20 மும்பை லீக்கின் பயிற்சி ஊழியராக இருந்த அவர், பின்னர் டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டியாக சச்சின் டெண்டுல்கர் நியமித்தார். ஏனெனில் சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் சிறுவயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் அதிக தூரம் என்பதால் அங்கு வினோத் காம்ப்ளியால் செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வினோத் காம்ப்ளி, தற்போது பிசிசிஐ வழங்கும் 30,000 ஓய்வூதியம் மட்டுமே தனது குடும்பத்தை காப்பாற்ற பயன்படுவதாகவும், பொருளாதார ரீதியாக தான் மிகவும் கஷ்டப்படுவதால், மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்கு பணி கொடுத்து உதவுமாறு உருக்கமாக கேட்டிருந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியநிலையில், இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் பதில் ஏதும் கூறவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வினோத் காம்ப்ளிக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேலை வழங்க முன்வந்துள்ளார். சாஹ்யாத்ரி இண்டஸ்ட்ரி குழுமம் இந்த வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் தொடர்பான வேலை இல்லை என்றும், நிதிப்பிரிவில் உயர் பதவி என்றும் கூறப்படுகிறது. இந்த வேலைகுறித்து வினோத் காம்ப்ளி இன்னும் பதிலளிக்காதநிலையில், தொழிலதிபர் ஒருவர், கிரிக்கெட் வீரரின்  சோகத் கதையைக் கேட்டு மனம் இறங்கி வந்துள்ளது பாராட்டத்தக்கது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.