கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) சார்பில், மகாராஜா டி20 டிராபி 2024 நடைபெற்று வருகிறது. இதில், ஹூப்ளி டைகர்ஸ் மற்றும் கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஹூப்ளி டைகர்ஸ், முகமது தாஹா, கேப்டன் மணீஷ் பாண்டே மற்றும் அனீஸ்வர் கவுதம் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 10 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியில் லாவிஷ் கௌஷால் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்டது. 2வது பந்தில் அதிரடியாக ஆடிய நவீன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 1 பந்தில் ஒரு ரன் வெற்றிக்கு தேவையாக இருந்தது. அப்போது கிராந்தி குமார் ரன் அவுட்டாக, ஆட்டம் சமனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி அனிருதா ஜோஷியின் சிக்சரால் 10 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஹூப்லி டைகர்ஸ் அணியில் மணிஷ் பாண்டே சிக்சர் அடித்து அசத்தினார். அதிலும் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டு, ஆட்டம் 2வது சூப்பர் ஓவருக்குச் சென்றது.
இதைத் தொடர்ந்து 2-வது சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஹூப்லி டைகர்ஸ் அணி, 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அப்போது பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்காக களமிறங்கிய சேத்தன் - அனிருதா ஜோஷி இணை களமிறங்கியது. முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்ட நிலையில், 3வது பந்தில் சேத்தன் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு மீண்டும் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இதனால் 3-வது சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி ஒரு சிக்ஸர் உட்பட 12 ரன்களை குவித்தது. இதனால் ஹூப்லி டைகர்ஸ் அணி வெற்றிக்கு 13 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் கேப்டன் மணிஷ் பாண்டே - மன்வந்த் குமார் கூட்டணி களமிறங்கியது.
முதல் பந்திலேயே 2 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. பின்னர் அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசிப் பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கிராந்தி குமார் வீசிய பந்தில் மன்வந்த் குமார் பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலமாக பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை 3-வது சூப்பர் ஓவர் முறையில் ஹூப்லி டைகர்ஸ் அணி வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.
இதையும் படிக்க: தகுதியற்ற விமானியுடன் பறந்த விமானம்... ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி வரை அபராதம்!