விளையாட்டு

இலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்!

இலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்!

webteam

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர் மகராஜ் 9 விக்கெட்டுகளை அள்ளினார்.

 தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் பொறுமையாக ஆடி அரை சதம் கண்டனர். இருவரும் முறையே 57, 53 ரன்களில் அவுட் ஆயினர். பின்னர் வந்த சில்வா 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. 

ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகராஜ் 8 விக்கெட்டை வீழ்த்தினார். ரபாடா ஒரு விக்கெட்டை எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 277 ரன்கள் எடுத்திருந்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தனஞ்செயாவும் ஹெராத்தும் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். ஹெராத் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் சுழலில் விக்கெட்டை இழக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனஞ்செயா 43 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் மகராஜ் 9 விக் கெட்டுகளை அள்ளினார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு இது.

இதற்கு முன்பு 1995- ஆம் ஆண்டில் ஜிம்பாப் வே-க்கு எதிரான போட்டியில் ஆலன் டொனால்ட் 8 விக்கெட் வீழ்த்தியதே, தென்னாப்பிரிக்க வீரரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை முந்தியுள்ளார் மகராஜ்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. மார்க்ரமும் எல்கரும் பேட்டிங்கை தொடங்கினர். இரண்டாவது ஓவரிலேயே எல்கரின் விக்கெட்டை தூக்கினார் தனஞ்செயா. அவர், டக் அவுட் ஆனார். அடுத்து மார்க்ரமுடன் புரின் இணைந்துள்ளார். அந்த அணி 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து, ஆடி வருகிறது.