விளையாட்டு

’அடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நானில்லை’ - கார்ல்சன் சொன்ன வித்தியாச காரணம்!

ச. முத்துகிருஷ்ணன்

2023 ஆம் ஆண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை என உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், செஸ் போட்டியின் நம்பர் 1 வீரராக கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் உள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்தை வீழ்த்தி தன்னுடைய முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் வென்றார். அதன் பின் தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 5 முறை உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்றுள்ள கார்ல்சன் வருகின்ற ஆண்டு (2023) உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். ஆனால் செஸ் விளையாட்டில் “ஓய்வு” பெறவில்லை என்றும் கார்ல்சன் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன காரணம்?

தனது “தி மேக்னஸ் எபெக்ட்” எனும் போட்காஸ்ட் தொடரின் முதல் அத்தியாயத்தில் பேசிய கார்ல்சன், “இன்னொரு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட எனக்கு ஆர்வமில்லை. அதற்கான உந்துதலை நான் பெறவில்லை. அத்தொடரில் இனி நான் பெறுவதற்கு நிறைய இல்லை என்று நான் உணர்கிறேன். குறிப்பாக எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே நான் இத்தொடரில் விளையாட மாட்டேன். ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து வெளியேற எனக்கு இது சரியான நேரம் போல் உணர்கிறேன். எதிர்காலத்தில் மீண்டும் தொடரில் பங்கேற்பேனா என்பது தெரியவில்லை. ஆனால் நான் சதுரங்கத்திலிருந்து ஓய்வு பெறவில்லை. நான் இன்னும் ஒரு சுறுசுறுப்பான வீரராக இருக்கப் போகிறேன்” என்று கூறினார்.