விளையாட்டு

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Sinekadhara

மதுரையை சேர்ந்த ரேவதி, இந்திய தடகள அணியில் இடம்பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த நிலையில், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த அவர், தற்போது ஒலிம்பிக்கில் விளையாட உள்ளார்.

ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள ரேவதி, கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார. 'ஷூ' கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்ற ரேவதி, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் தடம் பதிக்க உள்ளார். ஏற்கெனவே ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற ரேவதி, ஞாயிறன்று நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

தனது பயணம் குறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில், ‘’எனக்கு பெற்றோர் இல்லை. நான், எனது பாட்டி மற்றும் சகோதரியுடன் மதுரையில் வசித்துவருகிறேன். மிகவும் கஷ்டமான குடும்பசூழலால் பாட்டி என்னை சிறுவயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்டார். 12 வகுப்பு படித்தபோது மதுரையில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது ஷு கூட இல்லாமல் வெறும்காலில் ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன் எனக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறினார்.

மேலும், இலவச விடுதி வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பிறகு தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் போட்டிகளில் வெற்றிபெற்றதால், பாட்டியாலாவில் உள்ள கேம்ப்பில் தங்கி பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். அதன்பிறகு முழங்காலில் அடிப்பட்டு சிரமப்பட்ட போதும், அதிலிருந்து மீண்டுவர பயிற்சியாளர்களும் எனது பாட்டியும் உதவிசெய்து, என்னை போட்டிகளில் பங்கேற்க  ஊக்கப்படுத்தினர். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளேன்’’ என்று பகிர்ந்துள்ளார்.