அறிமுகப் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர் அசத்தினார்.
இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் மோதிய முத்தரப்பு போட்டி பங்களாதேஷில் நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இலங்கையும் பங்களாதேஷூம் நேற்று மோதின. டாக்காவில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, 50 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உபுல் தாரங்கா 56 ரன்களும், கேப்டன் சண்டிமால் 45 , டிக்வெல்லா 42 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் ருபல் ஹூசேன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 41.1 ஓவரில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
இலங்கை தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மதுசங்கா, பங்களாதேஷின் முர்டாசா, ருபல், மஹ்மத்துல்லா ஆகியோரின் விக்கெட்டை தொடர்ந்து வீழ்த்தினார். இந்த ஹாட்ரிக் விக்கெட் மூலம் இலங்கை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.