44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழா, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்றது.
வண்ண விளக்குகளின் ஒளியும், கண்ணையும் கருத்தையும் கவரும் வகையிலான வடிவமைப்புடன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மின்னியது. அரங்கிற்கு வந்த செஸ் அணிகளுக்கும் வீரர்களுக்கும், பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியாக 187 நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அந்தந்த நாடுகளின் தேசிய கொடியுடன் வந்த வீரர்களை, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், வழி நடத்திச் சென்றனர். ஒவ்வொரு நாட்டின் அணிவகுப்பின் போதும், அரங்கின் மையத்தில் லேசர் ஒளியில் நாடுகளின் கொடிகள் ஒளிரவிடப்பட்டன.
நாட்டின் கலை அடையாளங்களாக 8 மாநிலங்களின் நடனங்கள் நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் கதக், மணிப்பூரின் மணிப்பூரி, ஓடிசாவின் ஒடிஸி, ஆந்திராவின் குச்சிபுடி, கேரளாவின் கதகளி.
மோகினி ஆட்டம், அசாமின் ஷத்ரியா, தமிழகத்தின் பரதநாட்டியம் என எட்டு நடனங்களை கலைஞர்கள் அரங்கேற்றி அரங்கை வசப்படுத்தினர்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாடலும் தொடக்க விழாவில் ஒலித்தது. விழாவில், தமிழகத்தின் இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசைநிகழ்ச்சி அனைத்து பார்வையாளர்களையும் கொள்ளைகொண்டது. இரு பியானோக்களை இசைத்தும், கண்களை கட்டிக்கொண்டும் பியானோ வாசித்த லிடியன் நாதஸ்வரத்தின் இசைத்திறமை அரங்கை மெய்மறக்கச் செய்தது.