Lucknow Super Giants Facebook
விளையாட்டு

கோட்டை விட்ட ஐதராபாத்.. ஒரே ஒரு ஓவரில் மாறிப்போன ஆட்டம்; மன்கட் - பூரன் அதிரடியில் லக்னோ அபார வெற்றி

45 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய மன்கட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது

PT WEB

இந்த ஐ.பி.எல்.லில் ப்ளே ஆஃப் இன்னும் தொடங்கவில்லை. ஆனால், கிட்டதட்ட நாக்-அவுட் சுற்றுகள் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் வரை எந்த அணியும் ப்ளே ஆஃபிற்குள் நுழையவும் இல்லை, எந்த அணியும் ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து விலகவும் இல்லை. அப்படியொரு நிலையில், ஐதராபாத் வெயிலில் சன்ரைசர்ஸுக்கும் சூப்பர் ஜெயன்ட்ஸுக்கும் நடந்து முடிந்தது ரோசமான ஆங்கில கிரிக்கெட் போட்டி.

டாஸ் வென்ற கேப்டன் மார்க்ரம், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அன்மோல்ப்ரீத்தும் அபிஷேக் சர்மாவும் ஐதராபாத்தின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் யுத்வீர் சிங். ஓவரின் 2வது பந்து, ஒரு பவுண்டரி தட்டினார் அன்மோல்ப்ரீத். மேயர்ஸின் 2வது ஓவரில், அன்மோல் ஒரு பவுண்டரியும், அபிஷேக் ஒரு பவுண்டரியும் அடித்தனர். ஃப்ரீ ஹிட் வாய்ப்பு ஒன்றையும் முற்றிலுமாய் நழுவவிட்டார் அன்மோல். யுத்வீரின் 3வது ஓவரில், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அபிஷேக் சர்மா. மேல் முறையீட்டுக் சென்று, பேட்டில் பந்து உரசியதை நிரூபீத்து, அவுட் என தீர்ப்பு வாங்கினர் சூப்பர் ஜெயன்ட்ஸ். அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை ஈஸி ப்ரீத் எடுக்கவைத்தார் அன்மோல்ப்ரீத்.

4வது ஓவரை வீசவந்தார் கேப்டன் க்ருணால். இரண்டு பவுண்டரிகள் அடித்தார் த்ரிப்பாட்டி. ஆவேஷின் 5வது ஓவரை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் த்ரிப்பாட்டி. அவர் அடித்துவிட்டு, ஆவேஷை ஆட்டோ ஏற்றி அன்மோலிடம் அனுப்பி வைக்க, அவரும் இரண்டு பவுண்டரிகளை ஊமைகுத்தாக குத்திவிட்டார். அடுத்த ஓவரை வீசினார் யாஷ் தாக்கூர். ராகுல் த்ரிப்பாட்டி காலி. பவுன்சர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில் 56/2 என ஓரளவுக்கு சிறப்பாகவே தொடங்கியிருந்தது சன்ரைசர்ஸ் அணி.

Lucknow super giants vs Sunrisers hyderabad

7வது ஓவரை வீசவந்தார் லாலேட்டன் மிஸ்ரா. அன்மோல்ப்ரீத் ஒரு பவுண்டரி அடித்தார். யுத்வீரின் 8வது ஓவரில், மார்க்ரம் ஒரு பவுண்டரியும், அன்மோல்ப்ரீத் ஒரு பவுண்டரியும் விரட்டினர். லாலேட்டனின் 9வது ஓவரில், மார்க்ரம் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார். அதே ஓவரில், அன்மோல்ப்ரீத்தின் விக்கெட்டை கைபற்றிய லாலேட்டன் ஆவேசமாகி பந்தை தரையில் ஓங்கி அடித்தார். அடுத்து களமிறங்கிய க்ளாஸன், ஆவேசமாகி பந்தை பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். ரவி பிஷ்னோயின் 10வது ஓவரில், மார்க்ரமிடமிருந்து ஒரு பவுண்டரி. 10 ஓவர் முடிவில் 95/3 என நிதானமாக ஓடியது சன்ரைசர்ஸ்.

மிஸ்ராவின் 11வது ஓவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பிஷ்னோயின் 12வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என களைகட்டினார் க்ளாஸன். லக்னோ ரசிகர்களுக்கு வயிறு எரிந்தது. பர்னால் போட பந்தை எடுத்தார் க்ருணால். 13வது ஓவரின் முதல் பந்து, மார்க்ரம் அவுட். அற்புதமான பந்தை முற்றிலுமாக கோட்டைவிட்ட மார்க்ரமை, ஸ்டெம்பிங் அடித்தார் டி காக். அடுத்து களமிறங்கிய பிளிப்ஸ், முதல் பந்திலேயே க்ளீன் போல்டானார். மீண்டுமொரு அற்புதமான பந்தை வீசினார் க்ருணால். ஹாட்ரிக் கிடைக்கவில்லை. ஆனாலும், அட்டகாசமான ஓவர்! யாஷ் தாக்கூரின் 14வது ஓவரில், ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார் அப்துல் சமாத். க்ருணாலின் 15வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15 ஓவர் முடிவில் 130/5 என சுணங்கியிருந்தது சன்ரைசர்ஸ் அணி.

Lucknow super giants vs Sunrisers hyderabad

மிஸ்ராவின் 16வது ஓவரில், க்ளாஸன் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை வெளுத்துவிட்டார். லாலேட்டனுக்கு பதில் பதோனியை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் கேப்டன் க்ருணால். மீண்டும் 17வது ஓவரை க்ருணாலே வீச, அப்துல் சமாத் ஒரு சிக்ஸரை நொறுக்கினார். யாஷ் தாக்கூரின் 18வது ஓவரில், அப்துல் சமாத் ஒரே ஒரு பவுண்டரி அடிக்க, 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 19வது ஓவரை வீசினார் ஆவேஷ் கான். 2வது பந்து சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்து ஒரு பீமரை போட்டுவிட்டார் ஆவேஷ். களத்திலிருந்த நடுவர் நோ பால் என்றார். உடனே, எல்.எஸ்.ஜி மேல் முறையீட்டுக்குச் சென்றார்கள். அனைத்து சாட்சிகளையும், ஆவணங்களையும் பார்த்துவிட்டு, `இது நோ பால் இல்லை' என குபீர் தீர்ப்பு வழங்கினார் மூன்றாவது நடுவர்.

`அது பீமர்யா பூமர் அம்பயர்' என ஐதராபாத் ரசிகர்கள் வெறியானார்கள். அடுத்த பந்தில் க்ளாஸன் ஒரு பவுண்டரி அடிக்க, அடுத்து கொஞ்சம் நேரம் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நடுவரின் தீர்ப்பில் வெறியான ரசிகர்கள், `கோலி கோலி' என கத்தி எல்.எஸ்.ஜி நிர்வாகத்தை வெறுப்பேற்றி இருக்கிறார்கள். ஆண்டி ஃப்ளவர், கம்பீர் எல்லோரும் டக்கவுட்டிலிருந்து மைதானத்திற்குள் இறங்கிவிட்டார்கள். அடுத்து பிரச்னையை போக்கிவிட்டு மீண்டும் ஆட்டத்தை துவங்கினார்கள். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் க்ளாஸன் அவுட். யாஷ் தாக்கூரின் கடைசி ஓவரில் அப்துல் சமாத் ஒரு சிக்ஸர் அடிக்க, 182/6 என இன்னிங்ஸை முடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அன்மோல்ப்ரீத் சிங்கிற்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் விவ்ராந்த் சர்மா. மேயர்ஸும் டி காக்கும் லக்னோவின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் புவி. முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே. ஃபரூக்கியின் 2வது ஓவரிலும் 2 ரன்கள் மட்டுமே. புவியின் 3வது ஓவரின் கடைசிப்பந்து, இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்தார் டி காக். 4வது ஓவரை வீசிய பிளிப்ஸ், 2வது பந்தில் மேயர்ஸின் விக்கெட்டைத் தூக்கினார். 14 பந்துகள் ஆடி 2 ரன்கள் மட்டுமே எடுத்து சோகமாக நடையைக் கட்டினார் மேயர்ஸ். அதே ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் மன்கட். நடராஜனின் 5வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஃபரூக்கியின் 6வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை வெளுத்தார் மன்கட். பவர்ப்ளேயின் முடிவில் 30/1 என லக்னோவை இறுக்கிப் பிடித்தது ஐதராபாத்.

Lucknow super giants vs Sunrisers hyderabad

மார்கண்டே வீசிய 7வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விரட்டினார் டி காக். பிளிப்ஸின் 8வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. மார்கண்டேவின் 9வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய டி காக், அடுத்த பந்திலேயே அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார். அபிஷேக் சர்மாவின் 10வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில் 68/2 என பரிதாபமாக ஆடிக்கொண்டிருந்தது லக்னோ. இன்னும் 60 பந்துகளில் 115 ரன்கள் தேவை.

11வது ஓவரை வீசிய நடராஜன், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அபிஷேக் சர்மாவின் 12வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ஃபரூக்கியின் 13வது ஓவரில் மன்கட் ஒரு பவுண்டரியும், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரியும் அடித்தனர். 14வது ஓவரை வீசவந்த மார்கண்டேவை, சிக்ஸருடன் வரவேற்றார் மன்கட். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் விரட்டிவிட்டார். புவியின் 15வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் மன்கட். அதே ஓவரின் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்ஸர் அடிக்க, 15 ஓவர்கள் முடிவில் 114/2 என ஊர்ந்துக் கொண்டிருந்தது லக்னோ. இன்னும் 30 பந்துகளில் 69 ரன்கள் தேவை. ஐதராபாத் ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள்.

16வது ஓவரை வீசவந்தார் அபிஷேக் சர்மா. முயல் போல் துள்ளி குதித்து வீசிய முதல் பந்து, 100 மீட்டர் சிக்ஸருக்கு பறந்தது. கொளுத்திவிட்டார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்து அகலப்பந்து, மாற்றாக வீசபட்ட பந்தும், `சொய்ங்' என சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்து, லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்டாய்னிஸ். அடுத்து களமிறங்கிய பூரன், முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார். அடுத்த பந்து, இன்னொரு சிக்ஸர், ஓவரின் கடைசிப்பந்து மற்றொரு சிக்ஸர். ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார் நிக்கி. ஒரே ஓவரில் 31 ரன்கள் கொடுத்து, லக்னோ அணியின் ஆண் தேவதையாக காட்சியளித்தார் அபிஷேக் சர்மா.

இன்னும் 24 பந்துகளில் 38 ரன்களே தேவை. நடராஜன் வீசிய 17வது ஓவரில் மன்கட் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். புவி வீசிய 18வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் பூரன். நடராஜனின் 19வது ஓவரில் ஒரே ஒரு சிக்ஸர், பூரனிடமிருந்து. 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவை. ஃபரூக்கியின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 19.2 ஓவர்களில் மேட்சை முடித்தார் பூரன். 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை திருப்பிப்போட்டு வென்றது லக்னோ. 45 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய மன்கட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது