ரோகித் சர்மா web
விளையாட்டு

லக்னோ அணியில் ரோகித் சர்மா? ரூ.50 கோடி கொடுத்து வாங்குவதா? முற்றுப்புள்ளி வைத்த உரிமையாளர்!

ரோகித் சர்மாவை, லக்னோ அணி வாங்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து அந்த அணியின் உரிமையாளர் பதிலளித்துள்ளார்.

Prakash J

ஐபிஎல்லின் மெகா ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, அடுத்த ஐபிஎல் தொடர் பற்றி அனைத்து அணி நிர்வாகங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்த முறை ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்ஷிப் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பை அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரோகித் சர்மாவும், மும்பை அணி நிர்வாகமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் டெல்லி, லக்னோ, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் அவரை வாங்க இருப்பதாகவும், அதில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ரோகித் சர்மாவை தாங்கள் வாங்க இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ரோகித் சர்மா மெகா ஏலத்தில் பங்கேற்பாரா என்பது உங்களுக்கோ அல்லது யாருக்காவது நிச்சயம் தெரியுமா? யாருக்கும் தெரியாது. அதனால் நாங்கள் வாங்க விரும்புகிறோமா என்ற பேச்சே தேவையற்றது.

ஒருவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை ரிலீஸ் செய்து, அவர் ஏலத்தில் பங்கேற்றாலும் லக்னோ அணியின் பர்ஸ் மதிப்பில் உள்ள 50 சதவிகித தொகையை ஒரு வீரருக்காக செலவிட முடியாது. அவருக்கு 50 சதவிகித தொகையை கொடுத்தால், மீதமுள்ள 22 வீரர்களை வாங்க தொகை போதாமல் போய்விடும் சூழல் உள்ளது. ரோகித் சர்மாவை வாங்க விருப்பமா என்று கேட்டால், நிச்சயம் அவர் சிறந்த வீரர், சிறந்த கேப்டன். ஆனால் ஒரு வீரரை வாங்குவது விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல, நம்மிடம் என்ன இருக்கிறது, லக்னோ அணிக்கு என்ன தேவை என்பதை பொறுத்தே வாங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புகார் எதிரொலி| பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப் பெற்ற அபோட் இந்தியா நிறுவனம்..என்ன காரணம்?

முன்னதாக, ரோகித் சர்மா மும்பை அணியிலேயே தக்கவைக்கப்படலாம் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ரோகித் சர்மா இன்னும் 3 ஆண்டுகள்வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம். பல நேரங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் ஒரு விஷயமாகவே இருக்காது.

அஸ்வின்

ஏனென்றால், வாழ்வில் போதுமான பெயரும் புகழும், பணமும் கிடைத்தபின் திருப்தியை நோக்கி நகர்வோம். அதனால் ஊதியம், கேப்டன்சி, பொறுப்பு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் மும்பை அணியிலேயே இருக்கலாம் என்று ரோகித் சர்மா முடிவெடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 2025க்குள் 6 லட்சம் பேருக்கு வேலை.. அதில் 70% பெண்களுக்கு வாய்ப்பு.. அதிரடியில் ஆப்பிள்!