விளையாட்டு

'கிரிக்கெட் மீதான காதல், மளிகை சாமான் வாங்கக்கூட உதவாது'- கிரிக்கெட்டர் டேரன் சமி புலம்பல்

'கிரிக்கெட் மீதான காதல், மளிகை சாமான் வாங்கக்கூட உதவாது'- கிரிக்கெட்டர் டேரன் சமி புலம்பல்

JustinDurai

'கிரிக்கெட் மீதான காதலுக்காக விளையாடிய காலம் மலையேறிவிட்டது' என புலம்பித் தீர்க்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சியளித்தது இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர்-12 சுற்றுக்குக் கூட முன்னேறாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே வீரர்களுக்கு சம்பளம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.  இதனால் சமீபகாலமாக அந்த அணியின் ஆட்டத்திறன் மிகவும் கவலையளிக்கும் வகையிலேயே இருக்கிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி மீண்டும் வீரர்களின் சம்பள பிரச்சினையை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதுகுறித்து டேரன் சமி பேட்டி ஒன்றில் கூறுகையில்,  ''இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுவதால் அவர்கள் வேறெங்கும் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அணியில் 'ஏ' பிரிவில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர் ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் பெறுகிறார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'ஏ' பிரிவு வீரர் ரூ.1.2 கோடி மட்டுமே ஊதியம் பெறுகிறார். இது ஒரு பெரிய வித்தியாசம். இதனால் வெளிப்படையாக ஊதிய ஏற்றத்தாழ்வு பற்றிய கேள்விகள் எழத்தான் செய்யும். கிரிக்கெட் மீதான காதலுக்காக விளையாடிய காலம் மலையேறிவிட்டது. கிரிக்கெட் மீதான காதல் ஒரு மளிகை சாமான் வாங்கக்கூட உதவாது'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: நியூசிலாந்து, வங்கதேச தொடர்: 4 வகையான இந்திய அணி அறிவிப்பு - யார் உள்ளே, யார் வெளியே?