விளையாட்டு

பொறாமை பிடித்தவர்கள்தான் தோனியை குறை சொல்கிறார்கள்: ரவி சாஸ்திரி டென்ஷன்!

பொறாமை பிடித்தவர்கள்தான் தோனியை குறை சொல்கிறார்கள்: ரவி சாஸ்திரி டென்ஷன்!

webteam

பொறாமை பிடித்த சிலர்தான் தோனியை, இந்திய அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் சரியாக விளையாட வில்லை என்று கூறி, தோனிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. முன்னாள் வீரர்கள் விவிஎஸ். லட்சுமண், அகர்கர், கங்குலி ஆகியோர் அவருக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்திய கேப்டன் விராத் கோலி தோனிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது என்றும் 35 வயது ஆகிவிட்டது என்பதாலேயே அவரை குறை சொல்லக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தோனி விவகாரம் குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் கேட்டபோது,  ’தோனி யார் என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் அணியில் அவர் பங்களிப்பு என்ன என்பதும் தெரியும். அவர் மீது பொறாமை கொண்டவர்கள்தான், இந்திய அணியில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். அவர் வெளியேறுவதைக் காண, சிலர் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அவரை போன்ற சிறந்த வீரர்களுக்கு எப்போது விலக வேண்டும் என்பதும் தெரியும். தோனி, அவரது ஆட்டத்தைப் புரிந்து வைத்திருக்கிறார். அவர் பங்கு என்ன என்பதும் தெரியும். தோனி அணியின் தலைவராக இருந்தவர். சிறந்த தலைவராக இருந்தவர். இப்போது அணியில் சிறந்த வீரராகவே இருக்கிறார்’ என்றார்.