விளையாட்டு

விவோ விலகியதால் பிசிசிஐக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு தெரியுமா ?

விவோ விலகியதால் பிசிசிஐக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு தெரியுமா ?

jagadeesh

ஐபிஎல் தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பிலிருந்து விவோ நிறுவனம் விலகுவதால் பிசிசிஐ அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.440 கோடி இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதமே நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிரதான ஸ்பான்ஸராக இருப்பது சீனாவைச் சேர்ந்த விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியுள்ளது. இதனால் பிசிசிஐக்கு பொருளாதார சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஏனென்றால் இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பில் விவோ நிறுவனத்தின் பங்கு ரூ.440 கோடியாகும். 2018 முதல் 2022 வரை ஐபிஎல் ஸ்பான்ஸராக இருப்பதற்கு ரூ.2199 கோடி பிசிசிஐயிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது விவோ நிறுவனம். ஆண்டுக்கு ரூ.440 கோடியில் பிசிசிஐக்கு ரூ.220 கோடியும், மீதமுள்ள ரூ.220 கோடி ஐபிஎல் 8 அணிகளும் பங்குண்டு. அதன்படி ஒரு அணிக்கு தலா ரூ.28 கோடி கிடைக்கும். இப்போது இந்தாண்டு விவோ விலகிவிட்டதால் பிசிசஐக்கு மட்டுமல்லாமல் அணிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து இருந்தால் சொந்த ஊரில் நடக்கும் போட்டிகளுக்கு தலா ரூ.3 முதல் 3.5 கோடி வரை வருவாய் கிடைக்கும். ஆனால் இப்போது அமீரகத்தில் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் அணிகள் அந்த வருவாயையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால் ஒவ்வொரு அணிக்கும் இந்தாண்டு ரூ.21 முதல் ரூ.24 கோடி இழப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.