அர்ஜூன் டெண்டுல்கர் கடுமையாக உழைக்கக் கூடியவர். அவர் நுணக்கங்களை கற்றுக்கொண்டு இருக்கிறார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநரும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளருமான ஜாகீர் கான் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அர்ஜூன் டெண்டுல்கர் ஏற்கெனவே சையத் முஷ்டக் அலி கோப்பையில் விளையாடியவர். மேலும் கடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நெட் பவுலர்களாகவும் இருந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் கான் "சச்சினின் மகன் என்ற அழுத்தம் அர்ஜூன் மீது இப்போது மட்டுமல்ல எப்போதும் இருக்கும். அதனுடன் அவர் வாழ பழகிக்கொள்வதை தவிர வேறு வழி கிடையாது. ஆனால் மும்பை அணியின் சூழல் அந்த அழுத்தத்தை மறக்கடிக்கும். வலைப்பயிற்சியின் போது அர்ஜூனுடன் நிறைய நேரங்களை நான் செலவிட்டு இருக்கிறேன். அவருக்கு எனக்கு தெரிந்த பவுலிங் நுணக்கங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். அர்ஜூன் கடுமையாக உழைக்கக் கூடியவர். தொடர்ந்து கிரிக்கெட்டை கற்றுக்கொண்டு இருக்கிறார். மும்பைக்காக சிறப்பாக விளையாட என்னால் முடிந்த பயிற்சிகளை நிச்சயம் கொடுப்பேன். கொஞ்சம் பொறுத்தால் சிறந்த கிரிக்கெட் வீரராக அவர் உருவாகுவார். அவரைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். அவரின் திறமையை நிச்சயம் அவர் வெளிப்படுத்துவார்" என்றார் ஜாகீர் கான்.