இந்திய டென்னிஸ் வீரர் ‘தி கிரேட்’ லியாண்டர் பயஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
சுமார் 30 வருடம் அனுபவம் கொண்ட இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்(46) இன்று தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதனுடன் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ள அறிவிப்பு தான் அது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பயஸ், “அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைத்திடும். அத்துடன், 2020ஆம் ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் எனது இறுதி ஆண்டு என்பதையும் அறிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டில் நான் சில குறிப்பிட்ட தொடர்களில் மட்டுமே விளையாடவுள்ளேன். அதுவும் எனது அணியுடன் பயணிக்கவும், எனது நண்பர்களை சந்திக்கவும், எனது ரசிகர்களுடன் கொண்டாடுவதற்காக விளையாடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டும் முதல் இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த பயஸ், 2020ஆம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் காலெடுத்து வைக்கிறார். இவர் இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும், 10 முறை மற்ற தொடர்களில் இரட்டையர் பிரிவு பதக்கங்களையும் வென்றவர். இதுதவிர 66 முறை கோப்பைகளையும், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர்.