தனது கடைசி ஒரு நாள் போட்டியில், 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியுடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் குசல் பெரேரா, 99 பந்துகளில், 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 111 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 43 ரன்களும் மேத்யூஸ் 48 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் ஷபியுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் முஸ்தபிஷுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் தமிம் இக்பால் (0), சவும்யா சர்கார் (15 ரன்) இருவரும் மலிங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார்கள். முஷ்பிகுர் ரஹிமும் (67 ரன்), சபீர் ரகுமானும் (60 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். இருந்தாலும் அந்த அணி, 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதோடு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 35 வயதான மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். டி20 தொடரில் தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.