விளையாட்டு

அமைச்சருக்கு எதிராக பவுன்சர்..! மலிங்காவுக்கு ஓராண்டு தடை!

அமைச்சருக்கு எதிராக பவுன்சர்..! மலிங்காவுக்கு ஓராண்டு தடை!

webteam

விளையாட்டுத் துறை அமைச்சரை விமர்சித்த விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்த மலிங்கா விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மலிங்கா நேரில் ஆஜராகி, தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்தார். குற்றச்சாட்டுகளை மலிங்கா ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, மலிங்கா அடுத்த 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவர் பங்கேற்கும் சர்வதேச ஒருநாள் போட்டிகளின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிக்குத் தகுதிபெறாததற்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதி காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசிய மலிங்கா, கிளியின் கூடுகள் குறித்து குரங்களுக்கு என்ன தெரியும் என்று கருத்து தெரிவித்திருந்தார். ’எனக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் தடையால் அதிருப்தி அடைந்துள்ள எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்று மலிங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.