பர்மிங்காமில் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான லீ ஜி ஜியாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்தியாவின் லக்ஷ்யா சென்.
இங்கிலாந்தில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. நடப்புச் சாம்பியனான மலேசியாவின் லீ ஜி ஜியாவுக்கு எதிராக இந்தியாவின் லக்ஷ்யா சென் களமிறங்கினார். அசுர பலம் கொண்ட ஜியாவுக்கு எதிராக துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினார் லக்ஷயா சென். முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் லக்ஷயா சென். பின்னர் ஜி ஜியா சுதாரித்து ஆடியதால் 12-21 என்ற கணக்கில் 2வது செட்டை இழந்தார்.
பின்னர் இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஆடியதால் மூன்றாவது செட் அனல் பறக்க நடந்தது. மிகவும் போராடி 21-19 என்ற கணக்கில் அந்த செட்டை வென்று முதன் முறையாக ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்தார் லக்ஷயா சென்.
ஜனவரியில் நடந்த இந்திய ஓபனில் தனது முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்றதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் மிகவும் ஆக்டிவான வீரராக உருவெடுத்துள்ளார் லக்ஷயா. கடந்த ஜெர்மன் ஓபனில் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருந்தார். லக்ஷயா இறுதிப் போட்டியில் வென்று பட்டத்தை கைப்பற்றும் பட்சத்தில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் ஆடவர் என வரலாறு படைப்பார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் யார் சாம்பியன் என தெரிந்துவிடும்.