விளையாட்டு

மொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’

rajakannan

பிரான்ஸ் வீரர் பாப்பே, உலகக் கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் மொத்த ஊதியத்தையும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரருக்கான விருதை பெற்றவர் பிரான்ஸ் அணியின் கிலியன் பாப்பே. 19 வயதேயான பாப்பே, இந்த உலகக் கோப்பையில் பிரான்ஸ் வெற்றிப் பெறுவதற்கு ஒரு தூணாக களத்தில் செயல்பட்டார். இந்தத் தொடரில் அவர் மொத்தம் 4 கோல்கள் அடித்தார். அதில் அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகளுக்கு எதிராக ஒரு கோல், பெரு அணிக்கு எதிராக இரண்டு கோலும் அடித்தார்.

டீன் ஏஜ் வயதில் கோல் அடித்த இரண்டாவது வீரர் பாப்பே. 60 வருடங்களுக்கு முன்பு கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே தான் டீன் ஏஜ் வயதில் கோல் அடித்தார். அவருக்கு பின் தற்போது பாப்பே அடித்துள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடர் மூலம் தனக்கு வரும் மொத்த வருமானத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கவுள்ளதாக பாப்பே கூறியுள்ளார். ஊதியம் மட்டுமல்லாமல் போனஸ் தொகையையும் சேர்த்து அவர் நன்கொடையாக கொடுக்க முன் வந்துள்ளார்.  

இந்தத் தொடரில் ஒரு போட்டியில் அவரது ஊதியம் ரூ.15,40,603. உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றுள்ள நிலையில் அவரது ஒட்டுமொத்த ஊதியம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம். மொத்த தொகையையும் அவர் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கவுள்ளார். இதில் விளையாட்டுத்துறை சார்ந்த இலவச பயிற்சி மையத்திற்கும் கணிசமான தொகையை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தன்னுடைய ஊதியத்தை அந்தத் தொண்டு நிறுவனத்திற்கு அவ்வவ்போது அளித்து வருகிறார். அந்த நிறுவனம் மாற்றுத் திறனாளிகள் குறித்து விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்தி வருகிறது.

கால்பந்து வீரர்களில் நிறைய பேர் இதேபோல் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் கிற்ஸ்டியானோ ரொனால்டோ. தன்னுடைய தொண்டு செய்யும் குணத்திற்காகவே, மனிதாபிமானத்திற்கான விருதினை பெற்றுள்ளார் ரொனால்டோ.

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் இரண்டாவது இளம் வீரர் பாப்பே. முதலிடத்தில் பிரேசில் அணியின் நெய்மர் உள்ளார். அதிக வருமானம் ஈட்டும் வீரரான பாப்பே தன்னுடைய வருமானத்தினை தாராளமாக வழங்கி சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வருகிறார்.