விளையாட்டு

தோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே

தோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே

webteam

முறையான வழியனுப்பு விழா நடத்த தோனி தகுதியானவர்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி. முன்னாள் கேப்டனான தோனி, உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி அவர் அறிவிக்க வில்லை. ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தோனி கேட்டுக் கொண்டிருந்தார்.  அதன்படி அந்த தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. அடுத்து நடக்க இருக்கும் தென்னாப்பிரிக்கத் தொடருக்கும் அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிஷாப் பன்டுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்திய கிரிக்கெட் அணி முடிவு செய்துள்ளது. இதனால் தோனி விரைவில் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் ஓய்வு பெற்றால் அவருக்கு முறையான வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழல் பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளேவும் அதை தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ’’இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட், குறிப்பாக டி-20 போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால், சமீபகாலமாக அவரது ஆட்டம் நிலையற்றதாக இருக்கிறது. தோனி தொடர வேண்டுமா? என்பது பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும். வரும் டி-20 உலகக் கோப்பைத் தொடர்வரை அவர் அணியில் இருக்கிறார் என்றால், ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஆட வேண்டும்.

இதுபற்றி தேர்வுக்குழுவினர் கூடி, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். தோனி ஆடவில்லை என்றால் அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் கூடி விவாதிக்க வேண்டும். இதுபற்றி அவர்கள் தோனியிடமும் பேச வேண்டும். அவர் ஓய்வு பெற்றால் முறையான வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும். அதற்கு தோனி தகுதியானவர்தான்’’ என்றார்.