விளையாட்டு

அதிகாலை 3 மணிக்கு எழுந்தேன்; கோலியை எழுப்ப நினைத்தேன் - நினைவுகளை பகிர்ந்த குல்தீப் யாதவ்

அதிகாலை 3 மணிக்கு எழுந்தேன்; கோலியை எழுப்ப நினைத்தேன் - நினைவுகளை பகிர்ந்த குல்தீப் யாதவ்

webteam

கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட அனுபவத்தை தெரிவித்துள்ளார்

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை 2017ம், ஆண்டு விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்தி தன் திறமையை காட்டினார். ஆனால் போட்டி தொடங்குவதற்கும் முன் தன் மனநிலை எப்படி இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐபிஎல்க்கு விளையாடவுள்ள கொல்கத்தா அணிக்கான இணையப்பக்கத்திற்கு பேசியுள்ளார். அதில், நான் 3 போட்டிகளில் விளையாடவில்லை. என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தேன். சரியாக என் முதல் போட்டிக்கும் முதல் நாள் அனில் கும்ளே என்னுடன் உணவு உட்கொண்டார்.

அப்போது அவர் சொன்னார், நாளை நீ விளையாட உள்ளாய். உன்னிடம் இருந்து நான் 5 விக்கெட்டை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார். நான் பதட்டமடைந்தாலும் என்னால் முடியும் என்று கூறினேன். அன்று இரவு நான் இரவு 9 மணிக்கே உறங்கிவிட்டேன். அதிகாலை 3 மணிக்கே எழுந்து விட்டேன். நான் குழப்பத்திலும், பதட்டத்திலும் இருந்தேன். பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டு இருந்த விராட் கோலியை எழுப்பலாம் என்று யோசித்தேன். ஆனால் அவர் என்னை என்ன நினைப்பாரோ என்று தோன்றியது. என்னிடம் கோபப்படலாம். அதனால் மீண்டும் சென்று படுத்துவிட்டு 6 மணிக்கு எழுந்தேன்.

பிறகு மைதானத்திற்கு சென்றேன். பதட்டமாகவே இருந்தது. ஆனாலும் ரஞ்சி போட்டியை போலவே விளையாட நினைத்தேன். மதிய உணவுக்கு பிறகே என்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தேன். அது என்னுடைய மகிழ்ச்சியான தருணம். முதல் நாள் முடிந்த அன்று நான் சச்சினிடம் பேசினேன். அவர் பல விஷயங்களை கூறினார். சரியான நிலையை அடைய எவ்வளவு உழைக்க வேண்டுமென அன்று நான் படுக்கையில் படுத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்