விளையாட்டு

“அனுபவம் வாய்ந்த தோனியை இந்திய அணி மிஸ் செய்கிறது” : குல்தீப் ஓபன் டாக்

“அனுபவம் வாய்ந்த தோனியை இந்திய அணி மிஸ் செய்கிறது” : குல்தீப் ஓபன் டாக்

webteam

மகேந்திர சிங் தோனிக்கு அனுபவம் மிகவும் அதிகம் எனவும் அதை இந்திய அணி மிஸ் பண்ணுவதாகவும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன. சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் விளையாட இருக்கிறார்.

இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “விக்கெட் கீப்பிங்கில் கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டிங்கும் நன்றாகவே செய்கிறார்கள். அந்த வகையில் நான் அதிக வித்தியாசத்தை உணரவில்லை. ஆனால், தோனியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்து வருகிறது. தோனியின் அனுபவம் மிகப்பெரியது. அவர் இந்திய அணிக்கு நிறைய கொடுத்திருக்கிறார். எனவே அது போன்ற ஒரு வீரர் நிச்சயமாக விளையாடாதபோது நீங்கள் அவர் இல்லாததை உணர்வீர்கள். ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் நல்ல நாட்கள் மற்றும் கெட்ட நாட்கள் உள்ளன. ஆனால் மோசமானவை இருக்கும்போது அவற்றை ஆதரிப்பது முக்கியம். நீங்கள் ஒரு நாள் விளையாடுவது அல்ல, கிரிக்கெட்டுக்கு ஒரு வருடத்தில் நிறைய நாட்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தொடர்ந்து இவருக்கு அணியில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெறாத நிலையில், அடுத்து வரவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.