விளையாட்டு

3வது இடத்தை கே.எல்.ராகுலுக்கு விட்டுக் கொடுக்கும் விராட் கோலி

3வது இடத்தை கே.எல்.ராகுலுக்கு விட்டுக் கொடுக்கும் விராட் கோலி

jagadeesh

விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் 3 ஆம் நிலை வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் 4 ஆம் நிலை வீரராகவும் விளையாடுவார். இந்த நிலைகளில் விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். ஆனால், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 ஆம் நிலை வீரராக களம் இறங்கினார். இது கிரிக்கெட் உலகில் பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் அரை சதம் கடந்து 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கின்றனர். அதனால் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்ட நிலையில், ராகுல் 3 ஆம் நிலை வீரராகவும், கோலி 4 ஆம் நிலை வீரராகவும் களமிறக்கப்பட்டனர். பல ஆண்டுகாலமாய் 3 ஆம் நிலையில் களம் கண்டு சாதனைகளை புரிந்த கோலி, ராகுலுக்காக தன் இடத்தை விட்டுக்கொடுத்துள்ளார். நான்காவது வீரராக களமிறங்கிய கோலி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

புள்ளி விவரங்களின்படி 3- ஆம் நிலை வீரராக 180 இன்னிங்ஸில் 63.39 ரன்கள் சராசரி வைத்துள்ளார் கோலி. கம்பீர், சச்சின், சேவாக் இந்திய அணியில் விளையாடிய போது 4-ம் நிலை வீரராக 38 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 56.48 ரன்கள் சராசரி வைத்துள்ளார் கோலி. அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக சராசரிகளைக் கொண்டு 3 ஆம் நிலை வீரராக சாதித்துள்ள விராட் கோலி தேவையில்லாமல் ராகுலுக்காக 4-ம் நிலை வீரராகக் களமிறங்குவதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் நிபுணர்களும் விமர்சித்துள்ளார்கள்.

மேலும், உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்றபோது ஆரம்பத்தில் நான்காம் நிலை வீரராகவே கே.எல்.ராகுல் விளையாடினார். பிறகு தவனுக்குக் காயம் ஏற்பட்ட பிறகுதான் தொடக்க வீரராக அவர் விளையாடினார். அதேபோல இன்றைய ஆட்டத்திலும் ராகுலை 4-ம் நிலை வீரராகக் களமிறக்கியிருக்கலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.