இங்கிலாந்து ஆடுகளத்தில் அனைத்து பந்துகளையும் விளாச முடியாது பொறுமை மிகவும் அவசியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் "விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும். அதீத ஆக்ரோஷமாக செயல்படக்கூடாது என்று எச்சரிக்கிறேன். இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் களம் இறங்கிய உடனே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது பலன் அளிக்காது. ஏனெனில் அங்கு பந்து நன்கு ஸ்விங் ஆகும்."
மேலும் " எனவே அதுபோன்ற ஆடுகளத்தில் பந்தை துல்லியமாக கணித்து பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட முடியாது. ஒவ்வொரு பந்தையும் அதன் தன்மைக்கு ஏற்ப எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை மிகவும் முக்கியம். அதை கோலி உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதானன் ரன்களை சேர்க்க முடியும்" என்றார் கபில் தேவ்.
தொடர்ந்து பேசிய அவர் " சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை பொறுத்தே முடிவுகள் மாறும்" என்றார் கபில் தேவ்.