நேற்றைய போட்டியில் மைதானத்தின் பவுண்டரியின் அளவு மிகவும் சிறியதாக இருந்து என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்தத் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,“இந்தப் போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. அத்துடன் ஒருபுறம் பவுண்டரியின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. அதாவது வெறும் 59 மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. எனவே இந்தச் சிறிய பவுண்டரியில் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் போன்ற ஷாட்களால் சிக்சர் அடித்தால் சுழற்பந்துவீச்சாளரால் என்ன செய்ய முடியும்.
அத்துடன் ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடியபோது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். எனினும் அவர்கள் அவுட் ஆன பிறகு சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.